Saturday, June 1, 2024

வணக்கம்!!

 

வணக்கம் !! என்பது மரியாதை நிமித்தமாய் சொல்லும் வார்த்தை . 
 
இதில் காலை வணக்கம் , மாலை வணக்கம் என்றெல்லாம் கிடையாது ,இதற்கு அடை கூடாது.. மாறாக, வாழ்துதலின் போது நற் காலை, நற்பகல், நல்இரவு என சொல்லலாம், இது தான் பிழை இல்லா சரியான தமிழ், இனி இது போன்ற பிழைகளை நாம் செய்ய வேண்டாம் !!!நடை முறை வாழ்கையில் இருந்தும் இந்த பழக்கத்தை நீக்குவோம்!!!!இதை பகிர்ந்து பிறருக்கும் தெரியப்படுத்துங்கள் .
 
 
நன்றி- Sasi Dharan (https://www.facebook.com/SasidharanGS)

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்

 

தற்போதைய பொருள்: அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லைக் கூட நகர்த்த முடியும்.
 

 
தவறு:
அம்மிக்கல்லை அக்கால இல்லத்தரசிகளின் கைஅரைப்பான் என்றே கூறலாம். உணவுப் பொருட்களை சிறிய அளவில் அரைப்பதற்கென்று மின்னூறி(மிக்ஸி) வந்துவிட்ட இந்தக் காலத்தில் அம்மிக்கல்லைப் பார்ப்பதே அரிதாய் இருக்கின்றது. பழைய வீடுகளில் எல்லாம் இந்த அம்மிக்கல்லானது வீட்டுத் திண்ணையின் ஒரு மூலையில் கருப்பு ஆடு போல படுத்திருக்கும். இது மட்டும் தனியாக இருக்காமல் துணைக்கு ஒரு குழவிக் கல்லையும் சேர்த்துக்கொண்டு தனது தலைக்குமேலே அதனைப் படுக்க வைத்திருக்கும். ஒரு அம்மிக்கல்லின் எடை (குழவிக்கல் நீங்கலாக) ஏறக்குறைய நாற்பது கிலோ இருக்கும். இந்த நாற்பது கிலோ எடையுள்ள ஒரு அம்மிக்கல்லை நகர்த்திவைக்க ஏன் அதனை அடியோ அடி என்று அடிக்க வேண்டும்?. இரண்டு கைகளால் நன்கு அழுத்தித் தள்ளினால் போதும்; நகர்ந்துவிடும். முடியாதவர்கள் ஒரு கடப்பாரையால் கீழிருந்து நெம்பினால் போதும்; நகர்ந்துவிடும். அதுவும் முடியாதவர்கள் துணைக்கு யாரையாவது அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்!.
இப்படிப் பல வழிகள் இருக்க ஏன் அம்மிக்கல்லை அடித்துப் படாதபாடு படுத்தவேண்டும்?. ஏற்கெனவே அடிமேல் அடி வாங்கித் தான் அது நம் வீட்டுக்கே வந்திருக்கிறது. ஆம், ஒரு அம்மிக்கல் சரியான வடிவம் பெறும்வரை ஆசாரியின் உளியால் எவ்வளவு அடிகளைப் பெறுகிறது என்பதை நாம் அறிவோம். இந் நிலையில் மேலும் பல அடிகள் அதற்குத் தேவையா?. பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து அந்த அம்மிக்கல் உடைந்துவிட்டால்?. முதலுக்கே மோசம் அல்லவா ஆகிவிடும்!. நடைமுறை உண்மையும் அது தானே. நகர்த்துகிறேன் பேர்வழி என்று ஒரு அம்மிக்கல்லை அடியோ அடி என்று அடித்துப் பாருங்கள். இறுதியில் அது உடைந்தே போய்விடும். எனவே அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்று பொருள் கூறும் இப்பழமொழி தவறு என்பது தெளிவாகிறது. இந்தத் தவறான பொருளுக்குக் காரணம் இப் பழமொழியில் வரும் 'நகரும்' என்ற சொல்லில் உள்ள ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அதைப் பற்றிக் கீழே காணலாம்.
 
திருத்தம்:
'நகரும்' என்ற சொல்லிற்குப் பதிலாகத் 'தகரும்' என்று வரவேண்டும். இதுவே இப் பழமொழியின் திருத்தமாகும். தகரும் என்றால் 'உடையும், சிதறும்' என்று பொருள்படும்.
 
நிறுவுதல்:
'முயன்றால் முடியாதது எதுவுமில்லை' என்னும் உண்மையினை உணர்த்த வந்த அருமையான பழமொழியே இது. நம்மில் பலரும் பல பல குறிக்கோள்களுடன் நாள்தோறும் நன்கு உழைக்கத் தான் செய்கிறோம். ஆனால் வெற்றி எல்லோரையுமா அரவணைக்கிறது?. இல்லையே. அன்றியும் வெற்றி ஒரே இடத்தில் நிலைத்து இருப்பதுமில்லை. எனவே வெற்றிக் கனியைச் சுவைக்க நாள்தோறும் கடினமாக உழைக்கத் தான் வேண்டும். ஆனால் எதுவரை?. நாம் எண்ணிய செயல்கள் அனைத்திலும் முழுமையான வெற்றி கிட்டும் வரை. சிலமுறை முயன்று தோல்விகளைத் தழுவியவர்கள் கூறும் வார்த்தை இது தான்: 'என்னால் முடியவில்லை; எனக்கு அது கிடைக்காது.' இது தவறான கருத்தாகும். ஏனென்றால் முடியும் என்று முழுமூச்சுடன் நம்பி தொடர்ந்து செயல்பட்டால் முடியாதது எதுவுமில்லை. கிடைக்காதது எதுவுமில்லை. இதனால் தான் திருவள்ளுவரும் 'முயற்சி திருவினை ஆக்கும்' என்று கூறுகிறார். இங்கே வள்ளுவர் கூறும் முயற்சி என்பது விடாமுயற்சியே ஆகும். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கூறும் வார்த்தை இதுதான்: 'என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் விடாமுயற்சியுமே எனது வெற்றிக்கான காரணங்கள்.'
விடாமுயற்சியும் கடினஉழைப்பும் இருந்தால் அரிய செயல்களைக் கூட நம்மால் செய்துமுடிக்க இயலும். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் விடாமுயற்சி என்னும் அடிமேல் அடி வைத்தால் உடையாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் கடினமான அம்மிக்கல் போன்ற அரிய செயல்கள் கூட நிறைவேறும். இதுவே இப் பழமொழியின் கருத்தாகும்.
இளைய தலைமுறையினருக்கு வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள இப் பழமொழியின் உண்மையான பொருள் இது தான்: 'அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லும் உடைந்துசிதறும்.' இப் பழமொழியில் வரும் 'அம்மிக்கல்' என்பது அரிய செயலையும் 'அடிமேல் அடி வைத்தல்' என்பது விடாமுயற்சியினையும் உருவகமாகக் குறித்து நிற்கின்றன.
சரியான பழமொழி: அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்.
விடாமுயற்சியும் கடினஉழைப்பும் இருந்தால் அரிய செயல்களைக் கூட நம்மால் செய்துமுடிக்க இயலும். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் விடாமுயற்சி என்னும் அடிமேல் அடி வைத்தால் உடையாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் கடினமான அம்மிக்கல் போன்ற அரிய செயல்கள் கூட நிறைவேறும். இதுவே இப் பழமொழியின் கருத்தாகும்.

மெளவல் மெளவல்

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மெளவல் மெளவல்!

ஆம்பல் மலர் தெரியும் இதென்ன மெளவல் 


 

இது தான் .. அந்த மெளவல் மலர்.மெளவல் என்றால் காட்டுமல்லிகை வகை..

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

 

தற்போதைய பொருள்: 
 
தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுவரும் பல தமிழ்நாட்டுப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'ஆற்றில்' என்னும் தூயதமிழ்ச்சொல்லே 'ஆத்துல' என்று கொச்சைவழக்கில் மருவியதாகப் புரிந்துகொண்டு 'ஆற்று நீரில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும்' என்று இப் பழமொழிக்குப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'அகத்தில்' என்னும் சொல்தான் 'ஆத்துல' என்று மருவியதாகப் புரிந்துகொண்டு 'அகத்துக்கே அதாவது வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்யவேண்டும்' என்று பொருள் கூறுகின்றனர்.
மேற்காணும் இரண்டு கருத்துக்களுமே தவறானவை. ஏனென்றால் இவை இரண்டுமே அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை உணர்த்துகின்றன. முதலில் ஆற்றுநீரில் போடுவதைப் பற்றிப் பார்ப்போம். இக் கருத்து அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். ஆற்றுநீரில் எதைப் போடவேண்டும்? ஏன் போடவேண்டும்?. கழிவுப் பொருட்களையா?. ஆற்றுநீரில் கழிவுப் பொருட்களைப் போட்டால் நீரின் தூய்மை கெடுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டுவிடும். அப்படியே போட்டாலும் அளந்துபோடச் சொன்னால் மிச்சத்தை எங்கே போடுவதாம்?. அதுமட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஆறு ஓடுவதில்லை. ஆறில்லாத ஊர்களில் வசிப்பவர்கள் கழிவுகளை எங்கே போடுவார்கள்?. எனவே இப் பழமொழியானது கழிவுகளை ஆற்றில் போட்டு ஒழிப்பதற்காகக் கூறப்பட்டதாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.
அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள்கூறுவது ஏற்புடையதல்ல. ஏனென்றால் போடுதல் என்ற சொல்லிற்கு செலவுசெய்தல் என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை. இல்லாத பொருளை வருவித்துக் கூறுவதால் இக் கருத்துப் பொருந்தாத ஒன்றாகும். அன்றியும் பழமொழிகள் யாவும் அனுபவம் நிறைந்த சான்றோர்களால் இளைய தலைமுறையினரின் நல்வாழ்விற்காக உருவாக்கப் பட்டவை என்று நாம் அறிவோம். எனவே இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை அச் சான்றோர்கள் கூறி இருக்க முடியாது என்று தெளியலாம். இப் பழமொழியின் தவறான கருத்துக்களுக்குக் காரணம் இப் பழமொழியில் உள்ள தூயதமிழ்ச் சொற்கள் கொச்சைவழக்கில் திரிந்ததும் ஒருசில எழுத்துப் பிழைகளுமே. இனி அவற்றைப் பார்க்கலாம்.
 
திருத்தம்: 
 
இப் பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.
புதுப்புது கருத்துக்களை நினைவில் கொள்ளும் முறை குறித்து இயற்றப்பட்டதே இப் பழமொழி ஆகும். மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை நினைவில் கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல் பலப்பல கேடுகளைச் சந்திக்க நேரிடும். சான்றாக ஒரு மாணவன் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோம். கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக் கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும். தகவல்களின் தன்மைகளையும் நோக்கங்களையும் அறியாமல் வெறுமனே நினைவில் கொள்ளும்போது தகவல் குறுக்கீடு உண்டாகித் தெளிவின்மை பிறக்கும். அறிவுத் தெளிவின்மையே பல தவறான செயல்பாடுகளுக்கான மூலமாகும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது பாதிக்கப்படுவதுடன் வாழ்வதே கடினமாகவும் தோன்றும். தெளிவின்மை எல்லை மீறும்போது பைத்தியமாகிவிடுகின்ற கேடும் இருக்கிறது.
மனித வாழ்க்கையில் அறிவின் பயன்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்று நாம் நன்கு அறிவோம். ஏனை உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே அறிவுதானே. வள்ளுவர் ஒருபடி மேலேபோய் அறிவினை ஒரு கருவி எனக் குறிப்பிடுகிறார். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று 421 ஆம் குறளில் அவர் குறிப்பிடுவதில் இருந்து நல்ல தெளிவான அறிவினை ஆயுதமாகக் கொண்டு அனைத்துத் துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள இயலும் என்று அறியலாம். இப்படிப்பட்ட அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்தபின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.
அன்றியும் கருத்துக்களை நினைவில் கொள்வது என்பது கடினமான செயல் ஒன்றும் அல்ல. ஏனென்றால் இதற்காக உடலுழைப்போ பொருட்செலவோ செய்யத் தேவையில்லை. இயல்பான மனநிலையில் உள்ள அனைவராலும் ஓரளவுக்குப் புதிய கருத்துக்களை மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதனால் தான் 'அகத்தில் போட்டாலும்' என்று உம்மை சேர்த்துக் கூறப்படுகிறது. இங்கு உம்மையானது 'எளிதான செயல்தானே' என்ற இகழ்ச்சிப்பொருளில் வந்துள்ளது.
'நினைவில் கொள்ளவேண்டும் அவ்வளவுதானே' என்று இகழ்ச்சியாக எண்ணி கருத்துக்களைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் நினைவில் கொள்ளக்கூடாது என்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறது இப்பழமொழி.
இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல
 
சரியான பழமொழி: "அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும்"

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

 



தற்போதைய பொருள்: ஒரு ஊரைச் சேர்ந்த மக்கள் இரண்டு பிரிவானால் கூத்தாடிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவர்.
 
தவறு: முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இந்த தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையை. விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத்தொடருக்கு கூறப்படும் தற்போதைய பொருள் எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். பொதுவாக ஒரு ஊர் என்றாலே அங்கே பலதரப்பட்ட மக்களும் வாழ்வார்கள். ஒரே ஊரில் வாழ்ந்தாலும் இம் மக்கள் சாதி, மதம், பொருளாதாரம் மற்றும் மொழி போன்றவற்றால் மற்றவர்களிடமிருந்து பிரிந்தே வாழ்கின்றனர். மனிதர்களுடைய இந்தப் பிரிவினை எண்ணங்களை தனக்குச் சாதகமாக இன்றுவரையில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது யாரென்றால் அது அரசியல்வாதியாகத் தான் இருக்கும். இந்த அரசியல்வாதிகளின் வேலை மக்களைப் பிரிப்பது அல்ல; ஏற்கெனவே பிரிந்திருக்கும் மக்களை எக்காரணம் கொண்டும் ஒன்றுசேர விடாமல் தடுப்பதே ஆகும். ஏனென்றால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் அது மிகப் பெரிய ஆற்றலாகிவிடும். அந்த ஆற்றலை எதிர்த்து நிற்க எந்த அரசியல்வாதியாலும் முடியாது. இறுதியில் அரசியல்வாதிகள் மண்ணைக் கவ்வ நேரிடும். அதனால் தான் அரசியல்வாதிகள் அனைவரும் மக்கள் ஒற்றுமையாகக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த நடைமுறை உண்மை.
 
இப்போது பழமொழிக்கு வருவோம். ஒரு ஊர் எப்போது ஏன் இரண்டு படும்?. மேலே நாம் கண்ட சாதி, மதம், பொருளாதாரம், மொழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு/பல காரணத்தின்/ காரணங்களின் அடிப்படையில் ஊர்மக்கள் இரண்டாகலாம்; மூன்றாகலாம்; நான்காகலாம்; இன்னும் எவ்வளவோ பிரிவுகளாகலாம். இதை யாரும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. சாதி மத அடிப்படையிலான பிரிவினை எண்ணம் என்பது மக்களின் குருதியில் வேரூன்றிப் போய்விட்டது. நமது முன்னோர்கள் எவ்வளவோ முயன்றும் பிரிவினை எண்ணத்தை அகற்றுவதில் முழுவெற்றி அடைய முடியவில்லை. திருமணம் தொடங்கி அரசாங்க வேலை வரையிலும் இன்று சாதி மதப் பேய்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இப்படி ஏற்கெனவே சாதி மதப் பாகுபாட்டால் பலவாறாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஏன் இரண்டாக்க வேண்டும்?. அதுமட்டுமின்றி இது சாத்தியமும் அல்ல; ஏனென்றால் ஒற்றுமையாக இருப்பவர்களைத் தானே பிரிக்க முடியும்?. எனவே 'ஊர்மக்கள் இரண்டு பிரிவானால்' என்ற விளக்கமே தவறு என்பதை உணரலாம்.
 
இனி 'கூத்தாடிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி' என்பது எவ்வாறு தவறு என்பதை ஆராயலாம். அதற்குமுன் இங்கே ஒரு உண்மைக் கதையினையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்துவந்த படியால் இவ் ஊரில் ஒரே ஒரு அம்மன் கோவில் மட்டுமே இருந்து வந்தது. ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இக் கோவிலுக்குத் திருவிழா நடத்தி கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து வந்தனர். ஒருமுறை ஊர்த்தலைவரின் மகன்களுக்குள் நிகழ்ந்த பிணக்கு காரணமாக அவ் ஊர்மக்கள் இரண்டு பிரிவானார்கள். இந் நிலையில் அவ் ஊரில் திருவிழாவும் வந்தது. அப்போது இந்த இரண்டு பிரிவினருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பல மண்டைகள் உடைய கலைநிகழ்ச்சிகள் நடத்த வந்திருந்த கூத்தாடிகள் உயிர் பயத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர். இப்போது சொல்லுங்கள் இந்த ஊர் இரண்டு பட்டதால் கூத்தாடிகள் திண்டாடினார்களா இல்லை கொண்டாடினார்களா என்று. பெரும்பாலான சிற்றூர்களில் இப்படித் தான் நடக்கிறது. சில சிற்றூர்களில் ஒரு பிரிவினர் அமைதியுடன் விட்டுக் கொடுக்க ஆண்டுதோறும் அங்கே எப்போதும்போல திருவிழாக்கள் நடக்கிறது. இதில் கூத்தாடிக்கு எங்கே இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது?. அதுமட்டுமின்றி பழமொழியில் ' கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்று தான் சொல்லப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்றால் 'இரட்டிப்பு மகிழ்ச்சி' என்று வலிந்து பொருள் கொள்வது தவறே ஆகும். இதிலிருந்து இப் பழமொழிக்குக் கூறப்படும் மேற்காணும் பொருளானது முற்றிலும் தவறானது என்பது தெரிய வருகிறது.
 
திருத்தம்:
 
மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். அது என்ன? ' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'பல்லும் நாக்கும்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.
 
நிறுவுதல்:
 
விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.
'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'
'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'
 
இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'பல்லையும் நாக்கையும்' குறிக்கும் என்று பார்ப்போம். மனிதரின் வாய்க்குள் பற்கள் இரண்டு வரிசைகளாக (மேல், கீழ்) 32 எண்ணிக்கையில் அமைந்தவை என்பதை நாம் அறிவோம். பொதுவாக நாம் வாய் மூடி இருக்கும்போது இந்த இரண்டு வரிசைப் பற்களும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு ஒரு குழுமமாக இருக்கும். அப்போது இந்தப் பற்களுக்குப் பின்னால் உள்ள நாக்கோ மிக அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும். இங்கே இந்த நாக்கு தான் கூத்தாடி ஆகும். இரண்டு வரிசைகளிலும் உள்ள 32 பற்களின் ஒருங்கிணைந்த குழுமம் தான் ஊர் ஆகும். இந்த ஊர் இரண்டாகும்போது அதாவது மேல்வரிசையும் கீழ்வரிசையும் பிரிந்து வாய் திறக்கும்போது இந்த நாக்கு ஆகிய கூத்தாடி ஆடத் துவங்கிவிடும். அதன் ஆட்டம் பேசுவதற்காகவோ உணவைச் சுவைப்பதற்காகவோ வேறு எதற்காகவோ இருக்கலாம். ஆக மொத்தம் பற்குழுமம் ஆகிய ஊர் இரண்டு பட்டால்தான் நாக்கு ஆகிய கூத்தாடிக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இந்த நடைமுறை உண்மையினை உருவகமாக்கி அழகான ஒரு விடுகதையாகப் புனைந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இந்த விடுகதையே நாளடைவில் தனது 'அது என்ன?' என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது.

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து

 

யதார்த்த பொருள்: 'பந்திக்கு முந்து' என்றால் உணவு இடப்படும் பந்தியில் முதல் ஆளாகச் சென்று உண்ண வேண்டும். இல்லையேல் உணவு முழுமையாகவும் சுவையுடனும் கிடைப்பது அரிது. 'படைக்குப் பிந்து' என்றால் போருக்குப் போகும்போது படையில் கடைசி ஆளாகச் சேர வேண்டும். இல்லையேல் போரில் இறந்துபடுவது உறுதி.
 
உண்மை பொருள்: வீரம் விளைந்த மண்ணான தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் போர் படையில் கடைசி படையான காலாட்படையிலாவது (படைக்கு பிந்து) இடம்பெறவேண்டும். அதேபோல், கடைசி படையில் முதல் வரிசையில் இடம்பெறவேண்டும் (பந்திக்கு முந்து).
 
இன்னொரு கோணம்:
 
இப்பழமொழியை இன்னொரு கோணத்தில் ஆராய்ந்த போது புதியதோர் விளக்கம் கிடைத்தது.
 
"பந்திக்க முந்து படைக்கப் பிந்து"
 
இங்கே பந்தித்தல் என்றால் திருமணம் செய்தலைக் குறிக்கும். படைத்தல் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளுதலைக் குறிக்கும். ஆக இப்பழமொழியின் இன்னொரு கோண விளக்கமானது ' திருமணம் செய்துகொள்வதை தள்ளிப் போடக்கூடாது. ஆனால் குழந்தை பேற்றினை சற்று தள்ளிப் போடவேண்டும்.' என்பதாகும்.
 
இப் புதிய விளக்கம் சரியா?
 
மேலே கண்ட புதிய விளக்கமானது எந்த அளவிற்குப் பொருத்தமானது என்று இங்கே பார்க்கலாம். இல்லற வாழ்க்கையின் இன்றியமையாமையை இளைய தலைமுறையினருக்கு பெரியவர்கள் சொல்லும் அறிவுரையாக இப்பழமொழி அமைந்துள்ள பாங்கு முதலில் கவனிக்கத்தக்கதாகும். இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளைஞிகளும் காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்வதில்லை. மேற்படிப்பு, வேலை, குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பருவ வயதுக்கு வந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் (அ) கொள்ள முடியாமல் இருந்து விடுகின்றனர். இதன் பக்க விளைவாக சமுதாயத்தில் பாலியல் சிக்கல்கள் உள்பட பல தீய பழக்க வழக்கங்களுக்கு இவர்கள் ஆளாக நேரிடுவதை நாம் காண்கிறோம்.
மேலும் திருமணம் செய்த அனைவரும் உடனுக்குடன் குழந்தை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை மிகவும் பெருகி விடும். மக்கள்தொகை பெருக்கத்தினால் வரக்கூடிய சமுதாயச் சிக்கல்கள் பற்றி நாம் நன்கு அறிவோம். இதனால் கணவன்-மனைவியிடையே புரிதல் குறைய ஆரம்பித்து பிணக்குகள் தோன்றத் துவங்குகின்றன. இதுவே பின்னாளில் மணமுறிவு வரை கொண்டுசென்று விடுகிறது. இதை நாம் பல குடும்பங்களில் நடைமுறையில் காணலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை 2 லிருந்து 3 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவதால் மக்கள்தொகையானது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வருவதுடன் கணவன்-மனைவியிடையே புரிதல் ஏற்பட்டு நல்ல இல்வாழ்க்கை அமைவது சாத்தியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் 'குழந்தை பெற்றுக் கொள்வதை சற்று தள்ளிப் போடுங்கள்' என்று கூறியுள்ளனர்.
பெருகி வரும் மக்கள்தொகை ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. நம் நாட்டில் மகாராட்டிர மாநிலம் தற்போது ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. குழந்தை பிறப்பை 2 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவோருக்கு ரூ.5000 பரிசளிப்பதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் நமது பெரியவர்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுவதின் இன்றியமையாமையை உணர்ந்து அக் காலத்திலேயே இப் பழமொழியின் வாயிலாகக் கூறிச் சென்றுள்ளனர். இனியேனும் இப் பழமொழியை நம் மக்கள் பின்பற்றினால் நாடு வளம்பெறும்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

நையாண்டி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை கொடைக்கானலில் வளரும்.
 
யதார்த்த பொருள்: தன்னை சாராத பிள்ளையை பேணி காத்து வளர்த்தால் தன் பிள்ளை தானாகவே வளரும்.
 
இதன் அர்த்தம் சரிதான்!.. ஆனால் புரிதல்.. இங்கு ஊரான் பிள்ளை என்பது அவரவர் மனைவி. ஏனென்றால், மனைவி என்பவள் இன்னொருவரின் பிள்ளையல்லவா.. அவளை பேணி காத்து வளர்த்தால் அவளின் வயிற்றில் வளரும் பிள்ளை தானாகவே வளரும்.

தமிழ் வாழ்த்து!

 வருவாய் இன்தமிழே! வாய்த்த நல்லமுதம்
தருவாய் என் அன்னாய்!! தாள் பணிந்தேன் நினதுமகன்

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவார்!

 

யதார்த்த பொருள்: அண்ணனும் தம்பியும் உதவாத இடத்திலும் அடி (உதை) உதவும்.
 
பழமொழி கதை: 
 
ராமாயணத்தில், ராமன் கானகம் சென்றபோது.. பரதன் பின்சென்று ராமனை நாடாள அழைத்தான்.. ஆனால் ராமன் மறுத்தான். பின்னர் லக்ஷ்மணனை நாடாள அழைத்தான்.. ஆனால் லக்ஷ்மணனும் மறுத்தான். பின்னர்... ராமனை (அடி) படிந்து அவர்தம் பாதுகை பெற்று.. 14 வருடம் நல்லாட்சி செய்தான்.
 
உண்மையான பொருள்: 
 
பரதனுக்கு எப்படி அண்ணனும் தம்பியும் உதவாத இடத்தில் (திரு)அடி உதவியதோ அதேபோல் அண்ணனும் தம்பியும் உதவாத இடத்திலும் அடி (அடி பணிதல், பணிந்து போதல்) உதவும்.

வணக்கம்!!

  வணக்கம் !! என்பது மரியாதை நிமித்தமாய் சொல்லும் வார்த்தை .    இதில் காலை வணக்கம் , மாலை வணக்கம் என்றெல்லாம் கிடையாது ,இதற்கு அடை கூடாது.. ம...